'நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சோதிக்கும்': பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், INDIA எதிர்க்கட்சி கூட்டணிகளுக்குள் உள்ள பரஸ்பர அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் யாரெல்லாம் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதை எதிர்க்கட்சியினர் சோதித்து பார்க்க விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று காலை, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிக் கூட்டணி ஆணவத்தால் ஆடுகிறது என்று கூறிய பிரதமர் மோடி, நேற்று டெல்லி சேவைகள் மசோதா மீதான வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
'கடைசி பந்தில் சிக்சர் அடிக்க வேண்டும்': பிரதமர் மோடி
நேற்று நடந்த டெல்லி மசோதாவின் வாக்கெடுப்பை "அரையிறுதி போட்டி" என விவரித்த அவர், அடுத்த வருட தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவித்தார். டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்குமான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு மசோதா(திருத்தம்) -2023 நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது பாஜகவுக்கு சாதகமான மிகப்பெரும் வெற்றியாகும். இந்நிலையில், இன்று மக்களவையில்அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது. இதிலும் வெற்றி பெற வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, 2024 தேர்தலுக்கு முன் கடைசி பந்தில் "சிக்சர்" அடிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களிடம் தெரிவித்தார்.