விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்
மூன்றாவது நாளாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஒத்திவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இனக்கலவரம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம், 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கோரிக்கை விடுத்து வருகிறது. 'மணிப்பூருடன் INDIA நிற்கிறது' என்ற பதாகைகளை ஏந்தியபடி, ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் மவுனப் போராட்டம் நடத்தினர்.
ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
மணிப்பூர் நெருக்கடி குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருவதால் நாடாளுமன்றம் மூன்றாவது நாளாக செயல்படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அனைத்துக் கட்சிகளையும் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதனால், கடந்த வியாழக்கிழமை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், எதிர்க்கட்சிகளால் தான் நாடாளுமன்ற கூட்டங்கள் பாதிக்கப்டுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.