முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை அரசாங்கம் 'ஹேக்கிங்' செய்ய முயன்றதாக புகார்: முழு விவரம்
அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா(யுபிடி) தலைவர் பிரியங்கா சதுர்வேதி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்(AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் தலைவர்கள் பவன் கெரா மற்றும் சசி தரூர் ஆகியோர் இது குறித்து புகார் அளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் வேலை செய்யும் சில முக்கிய அதிகாரிகளும் இதே குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். புகார் அளித்துள்ள அரசியல் எதிர்க்கட்சி தலைவர்களின் ஐபோன்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு யாரோ ஹேக்கிங் செய்ய முயற்சிப்பதாக எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது.
ஒரே நாளில் பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஹேக்கிங் எச்சரிக்கை
அவர்களது ஐபோன்களுக்கு வந்த எச்சரிக்கை மெசேஜை அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். "அரசு ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் உங்கள் ஐபோனை குறிவைப்பதாக சந்தேகிக்கப்படுகிறது" என்ற எச்சரிக்கை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அந்த தலைவர்களுக்கு தனித்தனியாக வந்துள்ளது. "காங்கிரஸ் தலைவர்களான பவன் கேரா மற்றும் சசி தரூர், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் ராகவ் சாதா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் ஆகியோருக்கு ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இந்த எச்சரிக்கை செய்திகள் வந்தன." என்று எம்பி மஹுவா மொய்த்ரா ட்விட்டரில் கூறியுள்ளார்.
மஹுவா மொய்த்ராவின் ட்விட்டர் பதிவு
அசாதுதீன் ஒவைசியின் புகார் பதிவு
ஆப்பிளின் அச்சுறுத்தல் எச்சரிக்கை மெசேஜ் என்றால் என்ன?
ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் என்பது, அரசு ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்களால் குறிவைக்கப்படும் பயனர்களை எச்சரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். பொதுவாக, iMessage வழியாக இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றனர். அறிவிப்புகளைப் பெறும் பயனர்கள், அவர்களது தனிப்பட்ட அடையாளம் காரணமாக அரசாங்கத்தால் தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஆப்பிள் நிறுவனம் தனது ஆதரவுப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், இது போன்ற ஹாக்கிங்கை எப்படி ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடிக்கிறது என்பதை வெளியே சொல்ல முடியாது என்றும் ஆதரவுப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அதை எப்படி ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடிக்கிறது என்பதை ஹேக்கர்கள் தெரிந்துகொண்டால் சிக்கி கொள்ளாமல் தப்பிக்கும் வழியை அவர்கள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆப்பிள் கூறியுள்ளது.
'அல்காரிதம் செயலிழப்பால் இந்த எச்சரிக்கை வந்திருக்கக்கூடும்': அரசாங்கம்
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கும் அரசாங்க வட்டாரங்கள், "அல்காரிதம் செயலிழப்பால்' அது போன்ற எச்சரிக்கைகள் வந்திருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளன. மேலும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசாங்கத்தின் இந்த கருத்துக்கு பதிலளித்திருக்கும் சிவசேனா(யுபிடி) தலைவர் பிரியங்கா சதுர்வேதி, இது "ஒரு சாக்குப்போக்கு" என்று கூறியுள்ளார். "ஆப்பிள் அல்காரிதம் செயலிழப்பால் தான் இந்த மால்வேர் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், எதிர்க்கட்சிக்கு மட்டுமே இந்த எச்சரிக்கைகள் வந்துள்ளன. அல்காரிதம் கூட தேர்ந்தெடுத்து சிலருக்கு மட்டும் தான் செயலிழக்கும் போல் தெரிகிறது. என்ன ஒரு சாக்குபோக்கு!" என்று பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
'மெசேஜின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டது': ட்விட்டரில் பிரியங்கா சதுர்வேதி
'ஒட்டுக்கேட்டு கொள்ளுங்கள், எங்களுக்கு பயம் இல்லை": ராகுல் காந்தி
இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "எங்கள் தொலைபேசிகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஹேக் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு பயம் இல்லை." என்று கூறியுள்ளார். "மிகக் குறைவானவர்களே இதை எதிர்த்துப் போராடுகிறார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஒட்டுக்கேட்டு கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை. என் போனை வேண்டுமானால், நானே தருகிறேன். நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் தான் இதை எதிர்த்து போராடுகிறோம்" என்று ராகுல் காந்தி இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், அரசாங்கம் திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.