
கர்நாடக வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது தாக்குதல் நடத்தும் விதமாக, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, போலியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும், கர்நாடக வாக்காளர் பட்டியலைக் காட்டி தனது கருத்தை உறுதிப்படுத்தி குற்றம் சாட்டினார். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் " பயங்கர் சோரி " (பெரும் வாக்குத் திருட்டு) நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் "வாக்கு திருட்டு" நடைபெற்றுள்ளதாக என்று ராகுல் கூறினார்.
போலி வாக்காளர்கள்
கட்சி நடத்திய ஆய்வில் போலி வாக்காளர்கள் தெரியவந்ததாக ராகுல் குற்றசாட்டு
"காங்கிரஸ் நடத்திய உள் ஆய்வில், கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், செல்லாத முகவரிகள், மொத்த வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது," என்று அவர் கூறினார். 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் கடும் போட்டி நிலவியது. பெரும்பாலான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலி கான் முன்னிலை வகித்தாலும், இறுதி முடிவுகளில் பாஜகவின் பிசி மோகன் 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் குறுகிய வெற்றியைப் பெற்றார். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மின்னணு வடிவத்தில் வழங்காதது குறித்தும் ராகுல் சந்தேகம் எழுப்பினார். அவ்வாறு செய்தால் அதன் "மோசடி" 30 வினாடிகளுக்குள் அம்பலமாகும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே மோசடிக்கு துணை போனதாக குற்றசாட்டு
"இது ஏழு அடி காகிதம். நீங்கள் இரண்டு முறை வாக்களித்திருக்கிறீர்களா அல்லது உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினால், நான் உங்கள் படத்தை எடுக்க வேண்டும், பின்னர் அதை ஒவ்வொரு காகிதத்துண்டுடனும் ஒப்பிட வேண்டும். இது மிகவும் கடினமான செயல்," என்று அவர் கூறினார். மேலும், வாக்காளர் தரவை கட்சிகள் ஆராய்வதைத் தடுக்க, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேண்டுமென்றே "இயந்திரத்தால் படிக்க முடியாத ஆவணங்களை" வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். "இந்தப் பணி எங்களுக்கு ஆறு மாதங்கள் எடுத்தது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவுகளைக் கொடுத்தால், அது எங்களுக்கு 30 வினாடிகள் எடுக்கும். எங்களுக்கு ஏன் இதுபோன்ற தரவு வழங்கப்படுகிறது?" என்று கூறினார்.