'நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது': மணிப்பூர் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை நேரில் சென்று பார்வையிட 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் கொண்ட குழு, 2 நாட்கள் பயணமாக மணிப்பூருக்கு சென்றுள்ளது. இந்த பயணத்தின் போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குகி மற்றும் மெய்தே சமூகங்கள் இருக்கும் பகுதிகளுக்கும் நிவாரண முகாம்களுக்கும் சென்றனர். இந்நிலையில், இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்த எதிர்க்கட்சிகள் குழு, தங்கள் அவதானிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அறிக்கையை அவரிடம் கொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்த பயணத்தை விமர்சித்திருக்கும் பாஜக, அவர்கள் ஊர் சுற்றி பார்க்கவும் போட்டோ எடுக்கவும் மட்டுமே அங்கு சென்றுள்ளனர் என்று கூறியுள்ளது.
இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்ட எதிர்க்கட்சி குழு
நேற்று INDIA எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 21 எம்.பி.க்கள் டெல்லியில் இருந்து மணிப்பூரின் இம்பாலுக்கு வணிக விமானத்தில் பயணம் செய்தனர். பயணத்தின் முதல் நாளான நேற்று, எதிர்க்கட்சித் தலைவர்கள் இம்பால், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் மற்றும் சுராசந்த்பூரில் அமைந்திருக்கும் ஏராளமான நிவாரண முகாம்களுக்குச் சென்றனர். அதன் பிறகு, காங்கிரஸ் தலைவர்கள் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் கௌரவ் கோகோய் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்ட எதிர்க்கட்சி குழு, வெவ்வேறு முகாம்களுக்கு சென்று பார்வையிட்டது. இந்நிலையில், இன்று ராஜ்பவனில் வைத்து மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உகேயை சந்தித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், அவரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தனர்.