INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு
26 எதிர்க்கட்சிகள் இணைந்த INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தின் முதல் நாளன்று எதிர்க்கட்சி தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து கொள்வார்கள். அதற்கு அடுத்த நாள், அதாவது, செப்டம்பர் 1 ஆம் தேதி அதிகாரபூர்வ கூட்டம் நடைபெறும். மும்பை பாவாயில் உள்ள ஹோட்டலில் எதிர்க்கட்சி கூட்டமும், செய்தியாளர் சந்திப்பும் நடைபெறும் என தெரிகிறது. காங்கிரஸின் ஆதரவுடன், சிவசேனா(UBT) மற்றும் NCPஇன் ஷரத் பவார் பிரிவினர் கூட்டாக இந்த கூட்டத்தை நடத்த உள்ளனர்.
ஜூலை-18ஆம் தேதி பெங்களூரில் வைத்து இரண்டாவது கூட்டம் நடைபெற்றது
2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்ததை அடுத்து, இந்த எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற இருப்பதால், இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணியின் வெளிப்பாடாக ஜூன் 23ஆம் தேதி பீகாரில் வைத்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஒரு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அதற்கு அடுத்தபடியாக, ஜூலை-18ஆம் தேதி பெங்களூரில் வைத்து இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. தற்போது, மூன்றாவது கூட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.