
2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
செய்தி முன்னோட்டம்
ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்துவது எப்போது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி உள்ளார்.
ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது பொதுச் செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கும் என்று கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்தக் கொள்கை அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட ₹12,000 கோடி தேர்தல் செலவுகளைச் சேமிக்கும் என்று கூறினார்.
இந்த யோசனை பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், "நாங்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதில் உள்ளாட்சித் தேர்தல்கள் இல்லை. ஒருவர் கொள்கையை ஆதரிக்காவிட்டாலும், அதை கண்மூடித்தனமாக எதிர்க்கக்கூடாது." என்றார்.
அறிக்கை
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான அறிக்கை
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இதற்காக அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த பிறகு இந்த கருத்து வேகம் பெற்றது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை விமர்சித்து, இது ஜனநாயக விரோதம் என குற்றம் சாட்டியுள்ளன.
இதற்கு நேர்மாறாக, தேசிய ஸ்திரத்தன்மை மற்றும் திறமையான நிர்வாகத்திற்கு இது அவசியம் என்று பாஜக கூறுகிறது.
இந்நிலையில், 2029 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இதற்கான செயல்முறை முறையாகத் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.