
'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
செய்தி முன்னோட்டம்
தற்போது இரண்டு யூனியன் பிரதேசங்களாக(UTs) பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர், எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான 12வது நாள் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட்-2 முதல் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து வருகிறது.
மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2019இல் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார்-மேத்தா, ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கை தற்காலிகமானது என்று தெரிவித்தார்.
டவ்ய்க்கிய
"ஜம்மு-காஷ்மீரில் எப்போது தேர்தல் நடத்தப்படும்?": உச்ச நீதிமன்றம்
மேத்தாவின் வாதங்களை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், "இது எவ்வளவு தற்காலிகமானது? ஜம்மு-காஷ்மீரில் எப்போது தேர்தல் நடத்தப்படும்?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், "இதற்கு ரோட்மேப் இருக்கிறதா? அதை நீங்கள் எங்களுக்குக் காட்ட வேண்டும். ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவது எப்படி? இது எவ்வளவு காலம் தொடரும் என்பதை எங்களிடம் தெரிவிக்க நீங்கள் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும். ஜனநாயகத்தை மீட்டெடுப்பது முக்கியம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார்-மேத்தா, உயர்மட்ட அதிகாரிகளுடன் விவாதித்துவிட்டு, ஜம்மு காஷ்மீர் எப்போது மாநிலமாக்கப்படும் என்ற கேள்விக்கு வரும் வியக்கிழமை மத்திய அரசு பதிலளிக்கும் என்று கூறியுள்ளார்.