முக்கிய அரசியல் தலைவர் சுட்டு கொலை: ராஜஸ்தானில் பரபரப்பு போராட்டங்கள், கடையடைப்பு
ராஜஸ்தானில் பிரபல அரசியல் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். ராஜஸ்தானின் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி ஜெய்ப்பூரில் வைத்து நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். கோகமேடியின் வீட்டுக்கு வந்து அவருடன் அமர்ந்து தேநீர் பருகிய 3 பேர், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் கோகமேடி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு புல்லட் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுக்தேவ் சிங் கோகமேடி உயிரிழந்ததார்.
ஆட்சி மாற்றத்தின் போது ராஜஸ்தானில் சட்ட ஒழுங்கு சீர்குலைகிறதா?
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின், கோகமேடியின் கூட்டாளி ஒருவரும் உயிரிழந்தார். கோல்டி ப்ரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர்களின் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடைய ரோஹித் கோதாரா என்ற ரவுடி கும்பல் இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. மிக முக்கியமான் தலைவர் கோகமேடி கொல்லப்பட்டதை அடுத்து, ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு தான், ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. எனவே, ஆட்சி மாற்றம் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில், ராஜஸ்தானில் அதிகமான போராட்டங்கள் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.