கடலூரில் பறவைக்காய்ச்சல் எதிரொலி: இந்திய முட்டை இறக்குமதிக்கு ஓமன் தடை; மாதம் 6 கோடி முட்டை ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில கறிக்கோழிப் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு ஓமன் நாடு முழுமையாகத் தடை விதித்துள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை மற்றும் கோவை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் 8 கோடி கோழிகள் மூலம் தினமும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் மாதந்தோறும் 3 கோடி முதல் 6 கோடி முட்டைகள் வரை ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையால் நாமக்கல் பகுதி கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
டாக்டர் செந்தில் கோரிக்கை
நாமக்கல்லைத் தனி ஏற்றுமதி மண்டலமாக அறிவித்து தடையை நீக்க வேண்டும்
இது குறித்துக் கால்நடை மற்றும் விவசாயப் பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் சங்கத் தலைவரும் முட்டை ஏற்றுமதியாளருமான டாக்டர் செந்தில் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள கோழிகள் முழுமையாக அழிக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாமக்கல் மண்டலப் பண்ணைகளில் நவீன கூண்டு முறையுடன் வெளிநபர்கள் மற்றும் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்கும் முழுமையான உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் இங்கு பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, கோழிப்பண்ணைத் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நாமக்கல் மண்டலத்தைத் தனி முட்டை ஏற்றுமதி மண்டலமாக (Disease-free Zone) அறிவித்து, ஓமன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தடையை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக எல்லையில் சோதனைச
கேரளாவிலிருந்து கோழி இறைச்சி, முட்டை கொண்டு வர தடை
இதற்கிடையில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிற்குள் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கக் கால்நடை பராமரிப்புத் துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கேரள எல்லையோரப் பகுதிகளான தென்காசி மாவட்டம் புளியரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு ஆகிய இடங்களில் சிறப்புச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகள், முட்டை, இறைச்சி மற்றும் கோழித் தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டு, அவை எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுக் கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.