லோக்சபா சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி
மூன்று முறை பாஜக எம்.பி.யாக இருந்த ஓம் பிர்லா மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக சபாநாயகருக்கான தேர்தலில் INDIA கூட்டணியின் வேட்பாளர் கே.சுரேஷை குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடித்த பின்னர் அவர், இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று நாடாளுமன்ற சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய முடியாது போனதால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இருவரும் தத்தமது சபாநாயகர் வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைத்தனர். ஆளுங்கட்சி சார்பில் தற்போதுள்ள சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிட்டார். இன்று காலை 11 மணிக்கு 3வது நாளாக நாடாளுமன்றம் தொடங்கிய பின்னர், மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை ஆளும்கட்சி தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி தாக்கல் செய்தார்.
ஓம் பிர்லா வெற்றி
சபாயகருக்கு வாழ்த்து தெரிவித்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள்
சபாநாயகராக வெற்றி பெற்றதும் அவரை நாற்காலியில் அமர வைக்க, அவரை மேடைக்கு அழைத்துச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் நட்புணர்வுடன் மேடைக்கு சென்றனர். அதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு ஆளும்கட்சி அவைத்தலைவரும், பிரதமருமான மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, நீங்கள் இரண்டாவது முறையாக இந்த நாற்காலியில் அமர்ந்திருப்பது சபையின் அதிர்ஷ்டம். உங்களையும் ஒட்டுமொத்த சபையையும் நான் வாழ்த்துகிறேன்," என்று அவர் தனது உரையில் கூறினார். அதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "ஒட்டுமொத்த இந்தியக் கூட்டத்தின் சார்பாக ஓம் பிர்லாவுக்கு "வாழ்த்துக்கள்" தெரிவித்தார்.