
ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்
செய்தி முன்னோட்டம்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் 48 மணிநேரம் வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது.
மத்திய மற்றும் மாநில மீட்பு படையை சேர்ந்த அதிகாரிகள் இரவும் பகலுமாக உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு கொண்டிருந்தனர்.
ஆனால், 48 மணி நேரத்திற்கு பிறகு அவர்களது உடலும் நமபிக்கையும் சோர்வடைந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சோரோ காவல் நிலைய காவலர்களுக்கு ஏதோ ஒரு குரல் கேட்டது.
அந்த மெலிதான குரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் தலைகீழான பெட்டிக்கு அடுத்து இருந்த அடர்ந்த புதரில் இருந்து வந்தது.
இரண்டு நாட்களாக, மீட்பு படையினர் ரயிலுக்கு உள்ளே தேடினர்.
details
மீட்கப்பட்ட நபர் தற்போது நலமாக உள்ளார்
ஆனால், ரயிலுக்கு வெளியே உள்ள புதரில் தேடுதல் பணி எதுவும் நடக்கவில்லை.
"இதுபோன்ற ஒரு ரயில் விபத்து நடந்து 48-மணிநேரத்திற்குப் பிறகு ஒரு மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம். சில சமூக சேவகர்களின் உதவியோடு, புதரில் கிடந்த நபர் பாலசோர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்." என்று சோரோ காவல் நிலைய காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலையில் பலமாக அடிபட்டிருந்தாலும், மீட்கப்பட்ட நபர் தற்போது நலமாக உள்ளார்.
மேலும், அவர் அசாமை சேர்ந்த துலால் மஜூம்தார்(35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் 5 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு என்ன ஆனது என்பது சரியாக தெரியவில்லை.