ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி. கார்த்திகேயன் பாண்டியன் இன்று முறைப்படி ஆளும் பிஜு ஜனதாதளத்தில் இணைந்தார். முதல்வர், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த பிஜேடி தலைவர்கள் முன்னிலையில் அவர் பிஜு ஜனதாதளத்தில் முறைப்படி சேர்ந்தார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த வி. கார்த்திகேயன் பாண்டியன் 2000ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியானார். இவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அவர் அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்ற மறுநாளே, அவருக்கு கேபினெட் அமைச்சருக்கு நிகரான பதவி வழங்கப்பட்டது.
ஒடிசாவில் அதிக செல்வாக்கு மிக்க நபராக வலம் வரும் வி.கே.பாண்டியன்
"மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி." என அம்மாநில தலைமைச் செயலாளர் வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் தற்போது நவீன் பட்நாயக்கின் முறைப்படி சேர்ந்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான கார்த்திகேய பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவுறுத்தலின் பேரிலேயே விருப்ப ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது. ஒடிசா அரசாங்கத்திலும், பிஜு ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் நவீனுக்கு அடுத்தபடியாக, அதிக செல்வாக்கு மிக்க நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார். அதனால், எதிர்காலத்தில் இவர் நவீன் பட்நாயக்கின் வாரிசாவதற்கும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.