கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம்
கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, நேற்று, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்தி பரவியது. இது பலரையும் கலங்க வைத்தது. இந்த நிலையில், இந்த தகவல் உண்மையில்லை என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதோடு, அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப்பணி நடைபெற்று வருகிறது என்றும், இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் விவரங்கள் மற்றும் குடும்ப அட்டை விவரங்கள் சரி பார்ப்பு
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013-ன் படி, குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்க, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்களை வாங்க ரேஷன் கடைக்கு வரும் போதோ கைவிரல் ரேகைப்பதிவு மூலம் புதுப்பிக்க கூறப்பட்டு, அக்டோபர்-2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப்பணி நடைபெற்று வருகிறது. சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பது போல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்பட மாட்டாது. கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.