குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்: மனுதாரர்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று பிற்பகல் மறுத்துவிட்டது. மேலும், இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 237 மனுக்களுக்கு பதிலளிக்க, ஏப்ரல் 8ம் தேதி வரை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. கூடுதலாக, அந்தத் தேதிக்கு முன்னர் இந்த சட்டத்தின் மூலம் யாருக்காவது வழங்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுக மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் இந்திரா ஜெய்சிங் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு சார்பில் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
குடியுரிமை சட்டம் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திரிணாமுலின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட மனுதாரர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருத்தனர். இந்நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜேபி பர்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இன்று விசாரித்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம், இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். பிரச்சனைகளை ஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை மதிப்பதாக கூறிய மனுதாரர்கள், தற்போதைக்கு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.