இனி திருப்பதி லட்டு தயாரிக்க இந்த பொருள் சேர்க்கப்படாது என அறிவிப்பு
கர்நாடகாவின் கூட்டுறவு பால் பண்ணையினால் (கேஎம்எஃப்) நடத்தப்படுவது 'நந்தினி'. இங்கு கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் மிக பிரபலம். ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் திருமலை திருப்பதி, ஆந்திராவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆன்மீகத் தலமாகும். நந்தினி நெய் கொண்டுதான், திருப்பதியின் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்ற வியாழக்கிழமை, கர்நாடக அமைச்சரவை, நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு (TTDC), நந்தினி நிர்வாகத்திடம், விலையை குறைக்க முடியுமா என கேட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
விலையேற்றத்தால் டெண்டரை மாற்றிய திருப்பதி தேவஸ்தானம்
தேவஸ்தானத்தின் கோரிக்கையை ஏற்கமுடியாது என நந்தினி நிர்வாகம் கூறியதால், தற்போது லட்டு தயாரிப்பிற்கு, வேறு நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை, கேஎம்எஃப் தலைவர் பீமா நாயக்க்கும் உறுதிப்படுத்தியுள்ளார். பல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாயக், "ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்ததால், நெய் விலையும் உயரும். திருப்பதி லட்டுகளை குறைந்த விலையில் தயாரிக்க நெய் வழங்கும் புதிய நிறுவனத்தை TTD கண்டுபிடித்துள்ளது. எனவே, பல ஆண்டுகளுக்குப் பிறகு, டிடிடிக்கு நந்தினி நெய் வழங்குவதை நிறுத்த வேண்டியிருந்தது" எனத்தெரிவித்தார்.