பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்ததாக ANI கூறியுள்ளது. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றங்களுக்கான சிறைத்தண்டனை, குழந்தைகளைப் பாதுகாக்கும்(போக்சோ) சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகளுக்கும் குறைவாக இருப்பதால், மல்யுத்த வீரர்களின் கோரிக்கையின்படி அவரை கைது செய்ய முடியாது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக சிங்கிற்கு எதிராக போராடி வருகின்றனர்.
டெல்லி காவல்துறை தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்
பாஜக தலைமையிலான மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் டெல்லி காவல்துறை, சிங்குக்கு சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மல்யுத்த வீரர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறை, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய பல நாட்கள் எடுத்து கொண்டது. சிங் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி காவல்துறை தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குற்றப்பத்திரிகையாகவோ அல்லது விசாரணையின் இறுதி அறிக்கையாகவோ இருக்கலாம்.