தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவில் ஈடுபட மாட்டோம் என்பது இந்தியாவின் நீண்டகால முடிவாகும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவராக இருந்த அனுராக் தாக்கூர், இந்த முடிவு இந்திய குடிமக்களின் உணர்வை பிரதிபலிக்கிறது என்று மேலும் தெரிவித்தார். தற்போது இந்தியாவும், பாகிஸ்தானும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் கான்டினென்டல் போட்டிகளில் மட்டுமே கிரிக்கெட் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாகில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில், நான்கு இந்திய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அனுராக் தாகூரின் அறிக்கை வந்துள்ளது.
உலகக்கோப்பையில் நிலைமை என்ன?
தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை 2023, முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், பிசிசிஐ, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்ததையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 ஐ புறக்கணிப்பதாக பதிலுக்கு அச்சுறுத்தியது. இந்த முட்டுக்கட்டையை உடைக்க, ஆசியக் கோப்பையை ஏற்பாடு செய்யும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) , இலங்கையில் இவர்கள் போட்டியை நடத்தியது. இந்நிலையில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் மோத உள்ளன. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், அதன் நிகழ்வு நிச்சயமற்றதாகவே உள்ளது.