48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில், ஏற்கனவே 3 அதிகாரிகள் மரணித்த நிலையில், நேற்று ஒரு ராணுவ வீரர் காணாமல் போனதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கொக்கர்நாக் அருகே உள்ள அடர்ந்த காடுகளில் பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவம் மற்றும் போலீசார் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து புதன்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இராணுவத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஜம்முவை சேர்த்த ஒரு போலீஸ்காரர் உட்பட மூன்று அதிகாரிகள் அன்றைய நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். இருப்பினும் தீவிரவாதிகள் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை.
கூட்டு நடவடிக்கை
மத்திய பாதுகாப்புப் படைகள், தீவிரவாதிகளை பிடிக்க புதிய தலைமுறை ஆயுதங்களையும், தாக்கும் திறன் கொண்ட ஹெரான் ட்ரோன்கள் உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 12-13 இரவு, ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கின. அவர்கள் கரோல் கிராமத்தில் சில பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அருகில் இருக்கும் காட்டு பகுதிக்குள் தீவிரவாதிகள் மறைந்துள்ளதாக என்கவுண்டர் ஆபரேஷன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த என்கவுண்டர் ஆபரேஷனில், கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோன்சாக் மற்றும் DSP ஹிமான்யுன் முஸாமில் பட் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இவர்களை தொடர்ந்து நேற்று மற்றுமொரு ஜவான் மயமாகியுள்ளதாக தெரிகிறது