லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார்
டெல்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின்(ஜேடியு) தலைவராக மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதிஷ்குமார், அவரது சகாவான லாலன் சிங் ராஜினாமா செய்த சில நிமிடங்களில், மீண்டும் தலைவராக தேர்வானார். இதன் மூலம், பீகார் மாநில அரசியலில் பல வாரங்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் உள்ள, லல்லு பிரசாத் யாதவன் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் லாலன் சிங் நெருக்கம் காட்டியதே, அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலை கருத்தில் கொண்டு விலகியதாக லாலன் சிங் விளக்கம்
அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தனது தொகுதியில் கவனம் செலுத்துவதற்காக லாலன் சிங் ராஜினாமா செய்ததாக, அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங், பீகாரின் முங்கர் தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. "லாலன் சிங் தேர்தல் வேலைகளில் பரபரப்பாக இருப்பதால், கட்சி தலைமையை நிதிஷ்குமார் இடம் ஒப்படைக்க விரும்பினார். அதை அவரும் ஒப்புக்கொண்டார்" என பீகார் அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார். லாலன் சிங் தன்னை தலைவராக உருவாக்கிக் கொள்ள முடியாததால், அவர் மீது நிதீஷ் குமார் அதிருப்தியில் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் கனவிலிருந்த நித்திசுக்கு கிடைத்த கட்சி தலைவர் பதவி
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான, இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதீஷ் குமார் விரும்புவதாக கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் கட்சிக்கு தலைமை ஏற்றுள்ளார். இருப்பினும், கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தனர். இதனால், இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நித்திஷ் குமார் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.