
NIRF தரவரிசைப் பட்டியல் 2025: தேசிய அளவில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள தமிழக கல்லூரிகளின் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த தரவரிசையில், தொடர்ந்து ஏழாவது முறையாக சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2019 முதல் 2025 வரை, ஒட்டுமொத்த அளவில் சென்னை ஐஐடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கான பிரிவிலும் சென்னை ஐஐடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும், திருச்சியில் உள்ள என்ஐடி, இந்தப் பட்டியலில் 9 வது இடத்தைப் பிடித்துள்ளது.
மருத்துவம்
மருத்துவ கல்லூரிகள்
மருத்துவக் கல்வியில் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC), சிறந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான பட்டியலில் அகில இந்திய அளவில் 3 வது இடத்தைப் பெற்றுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் (JIPMER) 4 வது இடத்தில் உள்ளது. பல் மருத்துவம் பிரிவில் சென்னை, சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது. பார்மசி கல்லூரிகள் பிரிவில் ஊட்டியில் செயல்படும் ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரி 4 வது இடமும், எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி 10 வது இடமும் பிடித்துள்ளன.
பல்கலைக்கழகங்கள்
அரசு பல்கலைக்கழகங்கள்
அரசு பல்கலைக்கழகங்கள் பிரிவில் தேசிய அளவில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம், இந்த ஆண்டு 2 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் 10 வது இடத்தில் உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பிரிவில் கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 9 வது இடத்தையும், பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10 வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியல், கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் மாணவர்களின் திறன் போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, தேசிய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் சிறப்பான இடங்களைப் பிடித்துள்ளன.