LOADING...
டிரம்ப் விடுத்த வேண்டுகோள், அடிபணிந்த புடின்; உக்ரைனில் ஒரு வாரம் போர்நிறுத்தம்
உக்ரைனில் ஒரு வாரம் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று டிரம்ப் வேண்டுகோள்

டிரம்ப் விடுத்த வேண்டுகோள், அடிபணிந்த புடின்; உக்ரைனில் ஒரு வாரம் போர்நிறுத்தம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2026
08:36 am

செய்தி முன்னோட்டம்

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள் மீது ஒரு வார காலத்திற்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற தனது வேண்டுகோளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், "உக்ரைனில் தற்போது நிலவி வரும் வழக்கத்திற்கு மாறான கடும் குளிரைக் கருத்தில் கொண்டு, ஒரு வாரத்திற்குத் தாக்குதல்களைத் தவிர்க்குமாறு நான் தனிப்பட்ட முறையில் அதிபர் புடினிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்குச் சம்மதித்துள்ளார்," என்றார். பல ஆலோசகர்கள் இந்த முயற்சி பலிக்காது என்று கூறிய போதிலும், புடின் இதற்கு இணங்கியது எதிர்பாராத மற்றும் வரவேற்கத்தக்க ஒன்று என டிரம்ப் குறிப்பிட்டார்.

வரவேற்பு

போர் நிறுத்த உத்தரவை வரவேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இந்த அறிவிப்பை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார். "உயிர்களைப் பாதுகாப்பதற்கும், மின்சாரக் கட்டமைப்பு சிதையாமல் காப்பதற்கும் அதிபர் டிரம்ப் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நன்றி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்," என அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை

அமைதி பேச்சுவார்த்தைக்கான நகர்வுகள்

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, கடந்த வாரம் அபுதாபியில் வாஷிங்டன் மத்தியஸ்தம் செய்த அமைதி பேச்சுவார்த்தை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாஸ்கோவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தாக்குதல்களால் உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒரு வார கால அமைதி உக்ரைன் மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பல விவகாரங்களில் கருத்தொற்றுமை ஏற்படாததால், நிரந்தர அமைதி குறித்த பேச்சுவார்த்தைகள் சவாலாகவே உள்ளன.

Advertisement