7.4% வளர்ச்சி.. வீழ்ந்த பணவீக்கம்! இந்தியாவின் பொருளாதார பலத்தை பறைசாற்றும் 2026 ஆய்வறிக்கை
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி (Real GDP) வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நான்காவது ஆண்டாகத் தன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும், கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத மாற்றமாக, இந்தியாவின் கடன் மதிப்பீட்டை (Credit Rating) 'S&P' நிறுவனம் 'BBB-' நிலையிலிருந்து 'BBB' நிலைக்கு உயர்த்தியுள்ளது. இது நாட்டின் நிதி ஒழுக்கம் மற்றும் நிலையான பொருளாதாரச் செயல்பாட்டிற்குச் சர்வதேச அளவில் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
நிதி மேலாண்மை
கட்டுக்குள் வந்த பணவீக்கம் மற்றும் நிதி மேலாண்மை
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் (CPI) 1.7 சதவீதம் என்ற மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி மற்றும் ரிசர்வ் வங்கியின் முறையான நிதிக் கொள்கைகள் காரணமாக இது சாத்தியமானது. அதே நேரத்தில், அரசு தனது நிதியியல் பற்றாக்குறையை (Fiscal Deficit) ஜிடிபியில் 4.8 சதவீதமாகக் குறைத்துச் சாதனை படைத்துள்ளது. வரும் நிதியாண்டில் இதை 4.4 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதன் மூலம், அரசு தனது நிதிப் பொறுப்புணர்வு சட்டத்தின் (FRBM) இலக்குகளை நோக்கித் துரிதமாக முன்னேறி வருகிறது.
நுகர்வு
நுகர்வுத் திறன் மற்றும் புதிய உத்திகள்
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் தனியார் நுகர்வுத் திறன் (Private Consumption) உருவெடுத்துள்ளது. இது ஜிடிபியில் 61.5 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு எட்டப்பட்ட மிக உயர்ந்த அளவாகும். வேலைவாய்ப்பு உறுதி மற்றும் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. மேலும், இந்த ஆய்வறிக்கை மூலோபாயத் தன்னிறைவு (Strategic Indispensability) என்ற புதிய கருத்தாக்கத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம், இந்தியா வெறும் இறக்குமதிக்கு மாற்றாக மட்டும் இருக்காமல், உலகளாவிய வர்த்தகச் சங்கிலியில் எவராலும் தவிர்க்க முடியாத ஒரு முக்கியப் பங்காளராக மாற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
விவசாயம்
விவசாய முன்னேற்றம் மற்றும் ஏஐ தொழில்நுட்பம்
விவசாயத் துறையில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் 3,320 லட்சம் டன் தானியங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பணவீக்கத்தைக் குறைக்கவும் உதவியுள்ளது. அதே சமயம், நவீனத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டில் இந்தியா முன்னணி வகிக்கிறது. இந்தியாவில் 88 சதவீத நிறுவனங்கள் ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியாவின் மனிதவளம் மற்றும் ஆற்றல் தேவைகளுக்கு ஏற்பச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.