நிபா வைரஸ் எதிரொலி - கேரளா கோழிக்கோட்டில் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் காரணமாக 2 பேர் கேரளாவில் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தற்போது கேரளா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய குழுவும் பாதிப்பு அதிகமுள்ள கோழிக்கோடு மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அம்மாவட்டத்தில் இதுவரை 1080 பேர் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் - ராஜீவ் பால்
அதன்படி நேற்று(செப்.,15) மட்டும் 130 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவ்வாறு கண்டறியப்பட்டவர்களுள் 327 பேர் சுகாதார பணியாளர்கள், 29 பேர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் வரும் 24ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், டியூஷன்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனரான ராஜீவ் பால் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா பாதிப்பால் இறப்பதற்கான விகிதம் 2%மாக இருக்கும் நிலையில், நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் இறப்பதற்கான விகிதம் 40-70%வரை வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.