தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று(செப்.,16) சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பானது அதிகரித்து விட கூடாது என்னும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை செயலாளர் தலைமையிலும் ஆலோசனை கூட்டமானது நடத்தப்பட்டது என்று கூறினார். தமிழகத்தில் உள்ள இணை-துணை இயக்குனர்கள் மற்றும் டீன்கள் என கிட்டத்தட்ட 296 மருத்துவ அதிகாரிகளுடன் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மழைக்கால தொற்று பரவல், கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு
தொடர்ந்து பேசிய அவர், கேரளாவில் அதிகளவு பரவி வரும் நிபா வைரஸ் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார். எனினும், தமிழகத்தின் 6 எல்லை மாவட்டங்களில் நோய் தொற்று குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் அளித்துள்ளார். மேலும், மழைக்காலங்களில் இது போன்று டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது சகஜம் தான் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மக்கள் அடுத்த 3 மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.