நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70% உயிரிழக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல்
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் மிக அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார். டாக்டர் பாஹ்லின் கூற்றுப்படி, கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு 2-3 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. ஆனால், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு 40-70 சதவீதம் வாய்ப்புள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்று புதிதாக ஒரு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த 6 நோயாளிகளை தெரியாமல் தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 1,080ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.
நிபா வைரஸுக்கு தடுப்பூசி உருவாக்க ஐசிஎம்ஆர் திட்டம்
கேரளாவில் இந்த வைரஸின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நிபா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 20 டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடியை வழங்குமாறு ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில், நிபா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. "2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து சில டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடியைப் பெற்றோம். ஆனால், தற்போது, 10 நோயாளிகளுக்கு மட்டுமே அந்த டோஸ்கள் போதுமானதாக இருக்கும்," என்று டாக்டர் ராஜீவ் பால் கூறியுள்ளார். இந்தியாவுக்கு வெளியே நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 பேர் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.