கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது?
வரலாற்று நிகழ்வு: கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து, காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்துள்ளது. இந்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவில் நடத்திய தாக்குதல்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை இப்போது பார்க்கலாம். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனேடிய மண்ணில் பயங்கரவாத குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு பயிற்சி அளித்தல், நிதியளித்தல் போன்ற விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டுருந்தார் என்று உளவுத்துறை தெரிவித்திள்ளது. நிஜ்ஜார் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் புலிப் படையின்( KTF) தலைவராவார்.
போலி பாஸ்போர்ட்டை வைத்து கனடாவுக்கு தப்பி சென்ற நிஜ்ஜார்
1980கள் மற்றும் 1990களில், காலிஸ்தான் கமாண்டோ படை (KCF) தீவிரவாதிகளுடன் நிஜ்ஜார் தொடர்பில் இருந்தார். 2012இல் அவர் காலிஸ்தான் புலிப் படையின்( KTF) தலைவரானார். இதற்கிடையில், 1996ஆம் ஆண்டு "ரவி ஷர்மா" என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டை தயார் செய்த நிஜ்ஜார், கனடாவிற்கு தப்பிச் சென்று அங்கு டிரக் டிரைவராகவும், பிளம்பராகவும் பணியாற்றி வந்தார். மேலும், அவர் கனடாவில் இந்தியாவுக்கு எதிரான வன்முறை போராட்டங்களை ஏற்பாடு செய்தும் இந்திய தூதர்களை அச்சுறுத்தியும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். கனடாவில் உள்ள உள்ளூர் குருத்வாராக்கள் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து வந்தார்.
2007ஆம் ஆண்டில் கனேடிய குடிமகன் ஆன நிஜ்ஜார்
அவர் கனடாவில் ஆயுதப் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து, அங்கு AK-47 போன்ற துப்பாக்கிகளைப் பயன்படுத்த தனிநபர்களுக்கு பயிற்சி அளித்தார். கனடாவில் குடியேறுவதற்கு தனக்கு நிதியுதவி செய்த ஒரு பெண்ணை அவர் 1996இல் மணந்துகொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த பெண் 1997ஆம் ஆண்டு கனடாவிற்கு சென்று வேறொரு ஆணுடன் திருமணம் செய்து கொண்டார். அதனால், அவரால் அப்போது கனேடிய குடிமகனாக ஆக முடியவில்லை. 2001இல், நிஜ்ஜார் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ஆனால், அது அவருக்கு சாதகமாக முடியவில்லை. 2007ஆம் ஆண்டில்தான் அவர் கனேடிய குடிமகன் ஆனார். ஆரம்பத்தில் பாபர் கல்சா இன்டர்நேஷனல்(BKI) அமைப்பின் செயல்பாட்டாளராக இருந்த நிஜ்ஜார், KTF தலைவரும் பயங்கரவாதியுமான ஜக்தர் சிங் தாராவுடன் தொடர்பு கொண்டார்.
நிஜ்ஜாருக்கு பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது
KTF தலைவரும் பயங்கரவாதியுமான ஜக்தர் சிங் தாரா, முன்னாள் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங்கின் கொலையாளியாவார். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். பைசாகி ஜாதா அமைப்பின் உறுப்பினர் போல நடித்து, ஜக்தர் சிங் தாராவை சந்திக்க நிஜ்ஜார் ஏப்ரல் 2012ல் பாகிஸ்தானுக்குச் சென்றார். 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நிஜ்ஜாருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. ஐஎஸ்ஐ மற்றும் ஜக்தர் சிங் தாரா மூலம், நிஜ்ஜாருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. 2013இல் நிஜ்ஜார் KTFஇல் சேர்ந்தார். அதன்பின், KTF ஐ வலுப்படுத்துவதற்கும், பஞ்சாபில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கும் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பயங்கரவாதிகளை சந்திக்க அவர் மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்றார்.
2018 'மோஸ்ட் வாண்டட்' பட்டியலில் நிஜ்ஜார்
2013ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹர்ஜோத் சிங் பைரிங் மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் கையடக்க ஜிபிஎஸ் சாதனங்களில் பயிற்சி பெற கனடாவுக்கு அனுப்பப்பட்டனர். 2015ஆம் ஆண்டில், ஜக்தர் சிங் தாரா தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறகு, நிஜ்ஜார் KTFயின் தலைவர் ஆனார். பஞ்சாபில் பல பயங்கரவாத தாக்குதல்கள் நிஜ்ஜரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 2018இல் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் அப்போதைய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வழங்கிய 'மோஸ்ட் வாண்டட்' பட்டியலில் நிஜ்ஜாரின் பெயர் இடம்பெற்றிருந்தது பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பர்சிங்பூரைச் சேர்ந்த நிஜ்ஜார், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டிருந்ததாக உளவுத்துறை ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.