"அக்டோபர் 19, சனிக்கிழமை இரவு 11.59 மணிக்குள்": கனேடிய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்த இந்தியா
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர ரீதியிலான மோதல் திங்கள்கிழமை இரவு அதிகரித்தது. மத்திய அரசு, கனடாவிற்கான அதன் உயர்மட்ட தூதரை திரும்ப பெறுவதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஆறு கனேடிய தூதர்களை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வெளியேற கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் கனடாவிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் சில இராஜதந்திரிகளை குற்றவாளிகளாக கருதுவதாக கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ அரசு பெயரிட்டதைத் தொடர்ந்து திங்களன்று இரவு இந்த முன்னேற்றங்கள் நடந்தேறியது.
தூதர்கள் வெளியேற கெடு விதித்த இந்தியா
இந்தியா தூதர்களை திரும்ப பெறுவதாக அறிவித்த பின்னர், ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக இந்தியா கூறியது. இதில் செயல் உயர் ஆணையரும் அடங்குவார். அவர்கள் அனைவரும் இந்த வார இறுதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். செயல் உயர் ஆணையர் ஸ்டீவர்ட் ரோஸ் வீலர், துணை உயர் ஆணையர் பேட்ரிக் ஹெபர்ட் மற்றும் முதல் செயலாளர்கள் மேரி கேத்தரின் ஜோலி, லான் ராஸ் டேவிட் ட்ரைட்ஸ், ஆடம் ஜேம்ஸ் சூப்கா மற்றும் பவுலா ஓர்ஜுவேலா உட்பட ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியது. அவர்கள் ஐந்து நாட்களில் -- அக்டோபர் 19, சனிக்கிழமை இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.