பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
பெங்களூர் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று(டிச.,13) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தங்கள் விசாரணையினை துவங்கினர். அப்போது இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டார் என்று கூறி டி.நசீர் என்பவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிகிறது. இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் அங்கிருந்த சிலரை மதமாற்றம் செய்ததாக கூறப்பட்டது.
இதுவரை 444 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 15 பேர் கைது
அதாவது சிறையில் இருந்து வெளியே வந்த சிலர் மதம் மாறி ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக தகவல்கள் கிடைத்தது. அவ்வாறு மதம் மாறியவர்களுக்கு தேவையான பண உதவியும் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த மதமாற்றம் குறித்தும் மற்றும் ஐஎஸ் உள்ளிட்ட பிற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கக்கூடும் என்னும் சந்தேகத்தின் அடிப்படையிலும் இன்று இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகிக்கப்பட்ட நபர்களின் சம்மந்தப்பட்ட வளாகங்களில் மாநில காவல்துறையுடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மும்பை, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா முழுவதும் 444 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் இதுவரை பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.