மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில், பிரிவினைவாத தலைவரும், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின்(JLF) தலைவருமான யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்கக் கோரி தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. NIA சமர்ப்பித்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மாலிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது. நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்தது. விசாரணையின் போது, NIA சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன் மாலிக்கை ஒப்பிட்டுப் பேசினார்.
அமெரிக்கா செய்தது சரி என்று நான் நினைக்கிறேன்: மேத்தா
"இந்த நீதிமன்றத்தில் ஒசாமா பின்லேடன் இருந்திருந்தால், அவர் அதை போல் தான் நடத்தப்பட்டிருப்பார்" என்று மேத்தா கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இதை "அரிதான" வழக்காகக் கருதி மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் SG துஷார் மேத்தா வாதிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதி மிருதுல், உலகெங்கிலும் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ஒசாமா ஆஜர்படுத்தப்படவில்லை என்பதால் இருவரையும் ஒப்பிட முடியாது என்று கூறினார். அப்போது, "அமெரிக்கா செய்தது சரி என்று நான் நினைக்கிறேன்," என்று மேத்தா கூறினார். ஆனால், இதற்கு நீதிபதி மிருதுல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தற்போது, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலிக் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸ் மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.