புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு தேதியை அறிவித்தது தமிழ்நாடு அரசு
செய்தி முன்னோட்டம்
தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் மதுரை மாவட்டம், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் பிரபலம்.
இருப்பினும், தமிழ்நாட்டின் பல தென் மாவட்டங்களில் புத்தாண்டு தொடங்கிய உடனே, ஜல்லிக்கட்டு போட்டிகளும் தொடங்கி விடுகின்றன.
இதற்காக, ஏற்கனவே பல்வேறு சிறப்பு பயிற்சிகளுடன், மாடுகளும், மாடுபிடி வீரர்களும் தயாராகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
2nd card
புதுக்கோட்டையில் ஜனவரி 6ல் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு
2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி வரவேற்பு அன்னை ஆலய திருவிழாவையொட்டி ஜனவரி 6ம் தேதி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
வழக்கமாக, 6ம் தேதி திருவிழா தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக, ஜனவரி 2 அல்லது 3ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
இந்த ஆண்டு, பாதுகாப்பை காரணம் காட்டி அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி 6ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அங்கு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3rd card
அலங்காநல்லூர் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா?
கடந்த 2017ம் ஆண்டு மக்கள் தன் எழுச்சியாக திரண்டு போராடி ஜல்லிக்கட்டை மீட்ட பிறகு, தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அங்கீகரித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் ₹44 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
சுமார் 66 ஏக்கரில், 10,000 நபர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்க்கும் வண்ணம் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு கட்டமாக நடைபெறும் கட்டுமான பணிகளால், அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு அம்மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிவடையாததால், அங்கு 2025ம் ஆண்டு முதலே போட்டிகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.