ராமேஸ்வரம் கடற்பகுதி - புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு அப்துல் கலாம் பெயர்
அறிவியல் துறையில் சின்னஞ்சிறிய நீர்வாழ் நுண்ணுயிர்களை 'டார்டிகிரேட்ஸ்' என்று கூறுவர். இதனை நம்மால் நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும், வெறும் கண்களால் பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த உயிரினம் அரை மில்லிமீட்டரில் இருந்து ஒன்றரை மில்லிமீட்டர் வரை மட்டுமே வளரக்கூடிய தன்மையுள்ளது. இந்நிலையில் இந்த நுண்ணுயிர்கள் குறித்து கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியியல், உயிர் வேதியியல் துறைகளின் தலைவரும் பேராசிரியருமான எஸ்.பிஜோய் நந்தன் மற்றும் அவரது மாணவரான கே.விஷ்ணுதத்தன் உள்ளிட்ட 2 பேரும் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் கடற்பகுதியில் புதியவகை 'டார்டிகிரேட்ஸ்' நுண்ணுயிரினை கண்டறிந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
ஆண் இனத்தினை விட பெண் இனம் சற்று பெரிதாக உள்ளதாக தகவல்
கண்டறியப்பட்டுள்ள இந்த புது உயிரினத்திற்கு இவர்கள் இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவாக 'பாட்டிலிப்ஸ் கலாமி'என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இதுகுறித்து பேராசிரியர்.,எஸ்.பிஜோய் நந்தன் கூறுகையில், "முதன்முதலில் இந்த கடல்வாழ் நுண்ணுயிர் கேரளா-வடகராவில் 2021ம்ஆண்டு கண்டறியப்பட்டது. அதன்பின் 2வது முறையாக தற்போது ராமேஸ்வரம் கடற்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் அவர், சர்வகம் போல் தலைகள் கொண்ட பாட்டிலிப்ஸ் கலாமி 170-மைக்ரோமீட்டர்கள் நீளமும், கிட்டத்தட்ட 50-மைக்ரோமீட்டர்கள் அகலமும் கொண்டது. ஆண் இனத்தினை விட பெண் இனம் சற்று பெரிதாகவுள்ளது என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், நான்குஜோடி கால்கள், வெவ்வேறு நீளத்திலுள்ள உணர்ச்சி முதுகெலும்புகள் கொண்ட நுண்ணுயிர் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் கண்டறியப்பட்டதால் அவரது பெயரினை நினைவுகூரும் வகையில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.