வரும் 26ம்-தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில் வழக்கத்தை விட குறைவாகவே பதிவாகியுள்ளது என்று புள்ளி விவரங்கள் வெளியானது.
இதனிடையே இம்மாத துவக்கத்திலிருந்து பருவமழையானது தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக திருப்பூரில் 17 செ.மீ.,மழை பாதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று(நவ.,23) முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
மழை
மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து வரும் 26ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும் அதனை சுற்றியுள்ள அந்தமான் கடல் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக 26ம் தேதிக்குள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கரைக்கு திரும்பவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து செல்லும் போது வலுவிழக்க நேரிட்டால் தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் அதிக மழையினை ஏதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.