வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்கிறதா? வானிலை மையம் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை நவம்பர் 30 அன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுத் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மழை வாய்ப்பு
இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னையில் மழை வாய்ப்பு
முன்னதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று நவம்பர் 29 அன்று நீலகிரி கோவை தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள் திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றாலும் சென்னையின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் முதல் வாரம்
டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தில் மீண்டும் பரவலான மழைக்கு வாய்ப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து உருவான முந்தைய புயல்கள் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மழைப் பற்றாக்குறை நிலவி வந்தது.
தற்போது உருவாக உள்ள இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக டிசம்பர் 3 முதல் 9-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெற்றுப் புயலாக மாறுமா என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறும் புதியதாக மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.