
மிதிலி: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது.
இதனிடையே, மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நாளை(நவ.,16) புயலாக உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த புயல் காரணமாக மிதமான மழையினை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை உருவாகவுள்ள புதிய புயலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மழை
புதிய புயலுக்கு 'மிதிலி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
அதன்படி இந்த புயலுக்கு 'மிதிலி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாலத்தீவின் பரிந்துரையினை ஏற்று வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த 'மிதிலி' புயல் வரும் நவம்பர் 18ம் தேதி வங்கதேசத்தில் உள்ள மொங்கலோ-கோபுரா என்னும் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அதன் பின்னர் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புயலின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது என்று கூறப்பட்டாலும் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பருவமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.