12 நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல்: JN.1 கொரோனா குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை
முதன்முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட JN.1 வகை கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(CDC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா மாறுபாடு அதிக கொரோனா பரவலை ஏற்படுத்தலாம் என்றும், பழைய தடுப்பூசியின் சக்திக்கு இந்த மாறுபாடு அடங்காமல் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பதால், இது உலகளவில் பெரும் கவலையை எழுப்பியுள்ளது. BA.2.86 (Pirola) மாறுபாட்டின் துணை வகை கொரோனா தான் இந்த புதிய JN.1 கொரோனா வகை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது 2021 இல் தோன்றிய ஓமிக்ரான் வகை வைரஸின் பிறழ்ந்த மாறுபாடாகும்.
JN.1 கொரோனா வகை பற்றிய சமீபத்திய விவரங்கள்
JN.1 மற்றும் BA.2.86 ஆகிய இரு கொரோனா வகைகளும் தற்போது அமெரிக்காவில் அதிகம் காணப்படவில்லை. அமெரிக்காவின் மொத்த கொரோனா பரவலில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகவே JN.1 கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் மாத இறுதியில் லக்சம்பேர்க்கில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த மாறுபாடு உலகின் பிற பகுதிகளில் மிக விரைவான வளர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளது. இங்கிலாந்து, ஐஸ்லாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த கொரோனா தற்போது காணப்படுகிறது. XBB.1.5 வகையுடன் ஒப்பிடும்போது JN.1 கொரோனா வகையில் 41 கூடுதல் தனிப்பட்ட ம்யூடேஷன்கள் காணப்படுகின்றன. இதுவரை XBB.1.5 வரை மட்டுமே தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இதில் 41 கூடுதல் ம்யூடேஷன்கள் இருப்பதால் இதை பழைய தடுப்பூசிகளால் கட்டுபடுத்த முடியாது என்றே கூறப்படுகிறது.
JN.1 கொரோனா பரவலின் அறிகுறிகள்
JN.1 கொரோனாவின் அறிகுறிகள் BA.2.86 கொரோனா போன்ற முந்தைய வகைகளைப் போலவே உள்ளன. காய்ச்சல் அல்லது குளிர், இருமல், மூச்சு திணறல், சோர்வு, தசை அல்லது உடல் வலி, தலைவலி, சுவை அல்லது வாசனை இழப்பு, தொண்டை வலி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் ஆகியவை JN.1 கொரோனா பரவலின் அறிகுறிகளாகும். உலகில் கொரோனா இருக்கும் வரை புதிய மாறுபாடுகள் உருவாகி கொண்டே தான இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். JN.1 மற்றும் எதிர்காலத்தில் வரும் மற்ற எல்லா புதிய மாறுபாடுகளும் முந்தைய மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது சிறிய மாற்றங்களை கொண்டிருக்கும். JN.1 கொரோனா மாறுபாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரும்பாலான மாற்றங்கள் ஸ்பைக் புரதத்தில் காணப்படுகின்றன. எனவே, இந்த கொரோனா அதிகமாக பரவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.