லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு நடந்த சர்ச்சையால், சுற்றுலா பயணிகளின் கவனம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், மினிகாய் தீவுகளில் ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களை இயக்கும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. போர் விமானங்கள், ராணுவ விமானங்கள் மற்றும் வணிக விமானங்கள் ஆகியவற்றை இயக்கும் திறன் கொண்ட இரட்டை-நோக்கு விமானநிலையத்தை உருவாக்குவதே அரசின் திட்டம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முன்பே மினிகாய் தீவுகளில் ஒரு புதிய விமானநிலையத்தை உருவாக்குவதற்கான திட்டம் இருந்ததாகவும், அந்த முன்மொழிவு மீண்டும் அரசாங்கத்திற்கு அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் முடிவு
கடற்கொள்ளையர் மற்றும் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வரும் அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியைக் கண்காணிக்கும் தளமாக இது பயன்படும் என்பதால், இந்த விமானநிலையம் இந்தியாவுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கடலோர காவல்படை தான் முதல்முறையாக மினிகாய் தீவுகளில் ஒரு விமான ஓடுதளத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், தற்போதைய முன்மொழிவின்படி, மினிகாய் விமான நிலையத்தை இந்திய விமானப்படை முன்னிருந்து நடத்தும். மேலும், இந்த விமான நிலையம் லட்சத்தீவின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும். தற்போது லட்சத்தீவின் அகட்டி பகுதியில் ஒரே ஒரு விமான ஓடுதளம் மட்டுமே உள்ளது. அந்த விமான நிலையத்திலும் குறுகிய விமானங்களை மட்டுமே தரையிறக்க முடியும்.