பாதுகாப்பற்றது, தரமற்றது! நெஸ்லே டெய்ரி ஒயிட்னர் தயாரிப்புக்கு FSSAI தடை; நடந்தது என்ன?
செய்தி முன்னோட்டம்
பிரபல நெஸ்லே நிறுவனத்தின் லோ ஃபேட் டெய்ரி ஒயிட்னர் தயாரிப்பின் மாதிரி ஒன்று பாதுகாப்பற்றது மற்றும் தரமற்றது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. புதுடெல்லி கனாட் பிளேஸில் உள்ள பாரத் ஹோட்டல்ஸ் வளாகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அப்பொருள் 2006 ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு மாறாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தடை விதிப்பு
தயாரிப்பு விற்பனைக்குத் தடை மற்றும் நுகர்வோருக்கு எச்சரிக்கை
ஆய்வகப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவு வணிக அமைப்பிற்கு FSSAI முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் அந்த குறிப்பிட்ட நெஸ்லே தயாரிப்பின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பேட்ச் விபரங்களைச் சரிபார்த்த பின்னரே பொதுமக்கள் இத்தயாரிப்பை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்ய நெஸ்லே மற்றும் ஹோட்டல் நிர்வாகத்திற்கு உரியக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனம் விளக்கம்
பாஸ்பரஸ் அளவு குறித்த நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் விளக்கம்
FSSAI அமைப்பின் இந்த அறிக்கைக்கு நெஸ்லே இந்தியா நிறுவனம் உடனடியாகப் பதிலளித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் லோ ஃபேட் டெய்ரி ஒயிட்னர் முற்றிலும் பாதுகாப்பானது என்றும், அனைத்து அரசு விதிமுறைகளுக்கும் உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
பாலில் இயற்கையாகவே பாஸ்பரஸ் சத்து இருக்கும் என நிறுவனம் விளக்கியுள்ளது.
FSSAI ஆய்வகம் இயற்கையான பாஸ்பரஸையும் சேர்க்கப்பட்ட பாஸ்பரஸாகக் கணக்கிட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நெஸ்லே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
ஆணையத்தின் தொடர் நடவடிக்கை மற்றும் தயாரிப்புப் பரிசோதனைகள்
நெஸ்லே நிறுவனம் இது தொடர்பாகத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் தரவுகளையும் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறியுள்ளது.
பால் சார்ந்த பொருட்களில் இயற்கையாக பாஸ்பரஸ் இருப்பதைச் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளது.
எனினும், FSSAI அமைப்பு நுகர்வோர் பாதுகாப்பை முன்னிறுத்தி தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் தரத்தைப் பரிசோதித்து, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதில் உணவுப் பாதுகாப்பு ஆணையம் உறுதியாக உள்ளது.