முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் நேபாள பிரதமர் பாலேன் ஷா; அயோத்தி-ஜனக்பூர் ரயில் சேவை தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தனது முதலாவது வெளிநாட்டு இருதரப்பு அரசுமுறைப் பயணமாக நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்தியா வருகிறார். பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை அவர் நேரில் சந்திக்கும் முதல் நிகழ்வாக இது அமைந்துள்ளது. திங்கட்கிழமை புதுடெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இரு தலைவர்களும் நிறைவடைந்த திட்டங்களைக் காணொளி வாயிலாகத் தொடங்கி வைப்பதோடு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளனர். மேம்பாட்டுக் கூட்டாண்மை, எரிசக்தி, நீர்மின்சாரம், ரயில்வே இணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஆகிய துறைகளில் முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளன.
ரயில் சேவை
அயோத்தி மற்றும் ஜனக்பூர் தாம் இடையே 604 கி.மீ நேரடிப் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்
ராமாயண பாரம்பரியத்தின் முக்கிய மையங்களான இந்தியாவின் அயோத்தி மற்றும் நேபாளத்தின் ஜனக்பூர் தாம் இடையே புதிய நேரடிப் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
கடந்த நவம்பர் 5 அன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் திங்கட்கிழமை இச்சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படுகிறது.
ஆன்மீக சுற்றுலா மற்றும் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் இச்சேவையுடன் ராமாயண சுற்றுலா மற்றும் பௌத்த சுற்றுலாத் தடங்களை மேம்படுத்தவும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
அந்நிய முதலீடு
நேபாளத்தின் 80% ஏற்றுமதி மற்றும் அந்நிய முதலீட்டில் இந்தியாவின் முதன்மைப் பங்கு
கடந்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே 17 உயர்மட்டப் பயணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டாளியாகத் திகழ்கிறது.
நேபாளத்தின் மொத்தப் பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதம் இந்தியாவிற்கு செல்வதோடு, நேபாளம் பெறும் அந்நிய நேரடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்தே வருகிறது.
மேலும் நேபாளத்தின் 74 மாவட்டங்களில் 1,662 கோடி நேபாள ரூபாய் மதிப்பிலான 600-க்கும் மேற்பட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
மின்சார இறக்குமதி
10,000 MW மின்சார இறக்குமதி ஒப்பந்தம் மற்றும் பெட்ரோலிய குழாய் திட்டங்களின் விரிவாக்கம்
எரிசக்தித் துறையில் பத்து ஆண்டுகளில் நேபாளத்திலிருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.
இதன் மூலம் 2025-26 நிதியாண்டில் நேபாளம் இந்தியாவிற்கு மின்சாரம் ஏற்றுமதி செய்து சுமார் 1,800 கோடி நேபாள ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும் கடந்த 2024 நவம்பர் முதல் இந்திய மின் தொகுப்பு வழியாக வங்கதேசத்திற்கும் நேபாளம் மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.
இதனுடன் 2019-ல் தொடங்கப்பட்ட மோதிஹாரி-அம்லேக்கஞ்ச் பெட்ரோலியக் குழாய்த் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய குழாய் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.