"இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி, "எதிர்க்கட்சியில் நீடிக்க தீர்மானம் எடுத்துள்ளீர்கள்... மக்கள் உங்களுக்கு ஆசீர்வாதம் தருவார்கள்" என்றார். பாரதிய ஜனதா கட்சி தனது அனைத்து மக்களவை எம்.பி.க்களுக்கும் சபையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடி தனது உரையில், "இன்றைய எதிர்க்கட்சிகளின் நிலைக்கு" காங்கிரஸே காரணம் என்றும் கூறினார். "அவர்களுக்கு(காங்கிரஸ்) பல வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவர்களால் 10 ஆண்டுகளில் தங்கள் கடமையை செய்ய முடியவில்லை," என்று அவர் மேலும் கூறினார். காங்கிரஸ், பரம்பரை அரசியலை செய்வதாகவும் பிரதமர் மோடி அக்கட்சியை சாடியுள்ளார்.
'எவ்வளவு காலம் சமுதாயத்தை பிளவுபடுத்துவீர்கள்': எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் கேள்வி
சிறுபான்மையினருக்கு எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "உங்கள் பார்வையில் மீனவர்கள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம்... உங்கள் பார்வையில் பெண்கள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு என்ன ஆனது? எத்தனை காலம் பிரிவினைகளை நினைத்துக் கொண்டிருப்பீர்கள்? இன்னும் எவ்வளவு காலம் சமூகத்தை பிளவுபடுத்துவீர்கள்." என்று கூறினார். எந்த நல்ல காரியம் செய்தாலும் அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
'இந்தியா இன்று 5வது பெரிய பொருளாதாரம்': பிரதமர் மோடி
2014 இடைக்கால பட்ஜெட்டை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, "2014 இல் இந்தியா 11வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இன்று, இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. ஆனால் அவர்கள்(காங்கிரஸ்) அமைதியாக இருக்கிறார்கள்... அவர்கள் கனவு காணும் திறனைக் கூட இழந்துவிட்டனர்." என்று கூறினார். மேலும், தனது கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், இது மோடியின் உத்தரவாதம் என்றும் அவர் கூறினார். இன்றைய வளர்ச்சி விகிதம் காங்கிரஸால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
'இண்டியா' கூட்டணி கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
"இந்த நாடு பரம்பரை அரசியலின் சுமைகளை சுமந்து கொண்டிருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சியும் அதே பிரச்சனையை தான் சந்தித்துள்ளது. நிலைமை என்னவென்றால் மல்லிகார்ஜுன் கார்கே இந்த அவையில் இருந்து(மக்களவை) அந்த சபைக்கு(ராஜ்யசபா)சென்றுவிட்டார்.குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகி விட்டார். அந்த கூட்டணியின் அமைப்பு குலைந்துவிட்டதாக தெரிகிறது." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது உரையில், முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் தங்கள் உரைகளில் இந்திய மக்களை "சோம்பேறிகள்" என்றும் "சுறுசுறுப்பு இல்லாதவர்கள்" என்றும் கூறியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
'2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெற்றி பெறும்': பிரதமர் மோடி
ஜப்பானியர்களைப் போல இந்தியர்கள் ஒருபோதும் கடின உழைப்பாளிகளாக இருக்க முடியாது என்பது அவர்களின் சிந்தனையாக இருந்தது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர்களின்(காங்கிரஸின்) பார்வையும் சிந்தனையும் ஒரு குடும்பத்திற்குள்ளேயே இருந்துவிட்டது என்று பிரதமர் மோடி கூறினார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 405 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த 1000 ஆண்டுகளில் நடைபெற உள்ள முன்னேற்றத்திற்கு பாஜகவின் மூன்றாவது ஆட்சி வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.