நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதா தற்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முதல்வரும் தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு விலக்குக்கு எதிராக தனது கருத்துக்களை பல்வேறு இடங்களில் பதிவு செய்து வருகிறார். கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் நீட்தேர்வு குறித்து பேசியது பெரும் விமர்சனத்திற்குட்பட்டது. இதனிடையே சென்னை குரோம்பேட்டை பகுதியினை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்னும் மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து மருத்துவப்படிப்பில் சேரமுடியாததால் தற்கொலை செய்துக்கொண்டார். அடுத்த 2 நாட்களில் அவரது தந்தையும் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற ஆளுநரை கண்டித்து போராட்டம்
இதனை தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கோரி வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கட்சியின் இளைஞர் அணி, மருத்துவ அணி மற்றும் மாணவர் அணி இணைந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மருத்துவ கனவுகளை கொண்ட மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வினை ரத்து செய்யாத ஆளும் பாஜக.,அரசு மற்றும் பொறுப்பற்ற ஆளுநரை கண்டித்து, கழக தலைவரும் - தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படியே இந்த உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் எம்.பி.எழிலரசன் மற்றும் மருத்துவ அணி செயலாளர் டாக்டர்.எழிலன் நாகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.