Loading...
நாகர்கோவில் ரயில் பெட்டியில் பெண் கொலை: ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
நாகர்கோவில் ரயில் பெட்டியில் பெண் கொலை குறித்து அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் ரயில் பெட்டியில் பெண் கொலை: ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

எழுதியவர் Vasuki
Nov 22, 2026
04:53 pm

செய்தி முன்னோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தின் யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள், பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி ரயில் பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது, அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வாளர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான 2 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, செண்பகராமன்புதூரைச் சேர்ந்த தொழிலாளி அய்யப்பன் என்பவரைக் கைது செய்தனர். விசாரணையில், இந்தி பேசிய வடமாநிலப் பெண்ணான அவரை ரயில் பெட்டிக்குள் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அய்யப்பன் ஒப்புக்கொண்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

தமிழக டிஜிபி 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

உயிரிழந்த பெண்ணின் விலா எலும்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் இருந்ததும், அவர் அணிந்திருந்த மோதிரத்தைக் கொண்டு அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதும் தெரியவந்துள்ள நிலையில், இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் (NCW) தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹட்கர், தமிழக காவல்துறைத் தலைவர் (DGP) மகேஷ்குமார் அகர்வாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இச்சம்பவம் குறித்து விரிவான மற்றும் காலவரையறைக்குட்பட்ட விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்த அறிக்கையை (ATR) சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்புக் குறைபாடு

சிசிடிவி ஆய்வு மற்றும் ரயில்வே கண்காணிப்பை வலுப்படுத்த வலியுறுத்தல்

பொதுப் போக்குவரத்து மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள தேசிய மகளிர் ஆணையம், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களை முறையாகப் பாதுகாக்கவும், உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை விரைந்து கண்டறிந்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ரயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் பெட்டிகளைக் கண்காணிப்பது, இரவு நேர ரோந்துப் பணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), ரயில்வே போலீசார் (GRP) இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை முழுமையாக ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT