"ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு
செய்தி முன்னோட்டம்
சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய தலைமை அதிகாரி அனில் மாசிஹ்-க்கின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
"அவர்(அனில் மாசிஹ்) வாக்குச் சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது" என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த சண்டிகர் குடிமை அமைப்பின் முதல் கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ்குமார் சோங்கர் வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரின் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் தோற்கடிக்கப்பட்டார்.
8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி அணுகியது.
சண்டிகர்
விசாரணை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் பிறகு, அவர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அதை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், "அவர்(தலைமை அதிகாரி) வாக்குச்சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர் மீது வழக்குத் தொடர வேண்டும். அவர் ஏன் கேமராவைப் பார்க்கிறார்? இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது" என்று கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.