காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு
மும்பை மிரா ரோட்டில் உள்ள வாடகை குடியிருப்பில் 56 வயது நபர் ஒருவர் தனது காதலியை கொன்று அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர் பிரஷர் குக்கரில் தனது காதலியின் உடல் பாகங்களை வேகவைத்து, பின்னர் அவற்றை அப்புறப்படுத்த பிளாஸ்டிக் பைகளில் நிரப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சஹானி, சரஸ்வதி வைத்யா(36) என்பவருடன், கடந்த மூன்று ஆண்டுகளாக, மிரா சாலையில் உள்ள கட்டிடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து ஏதோ துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டெல்லி ஆப்தாப் பூனாவாலாவின் வழக்கை நினைவுபடுத்தும் சம்பவம்
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பல துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சிதைந்த உடலைக் கண்டெடுத்தனர். அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய உடல் பாகங்கள் மூன்று-நான்கு நாட்களுக்கு முன்பு அங்கு கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தேக நபரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல இன்னொரு சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம், டெல்லியிலும் நடந்தது. அப்போது, ஆப்தாப் பூனாவாலா என்ற நபர், தனது காதலியை கொலை செய்து, அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி நகரத்தின் பல இடங்களில் வீசிவிட்டு சென்றார். மேலும், அந்த உடல் பாகங்கள் மூன்று வாரங்களாக பிரிட்ஜில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.