மத்திய பிரதேசம்: பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான்
இரு தினங்களுக்கு முன்னர், மத்திய பிரதேசம் சித்தி மாவட்டத்தில், பழங்குடியினத் தொழிலாளி ஒருவர் மீது, பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலானது. நாடு முழுவதும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பிரவேஷ் ஷுக்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சுக்லா தங்கி இருந்த வீட்டை, முறையில்லாமல் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி, நேற்று (ஜூலை 5 .,) இடித்து தள்ளிவிட்டனர், அரசாங்க அதிகாரிகள். சுக்லாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம்(IPC), மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 294(ஆபாசமான செயல்கள்) மற்றும் 504(அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பது) ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்த முதல்வர் ஷிவ்ராஜ்
இந்த சம்பவம் குறித்து, மத்தியபிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானிடம் வினவப்பட்டது. அவரும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு "கடுமையான தண்டனையை" அரசாங்கம் வாங்கி தரும் என்று தெரிவித்தார். இதனிடையே, இன்று காலை((ஜூலை 6 .,), பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர், தஷ்மத் ராவத்தை நேரில் அழைத்து சந்தித்துள்ளார். அப்போது, ராவத்தின் கால்களை கழுவி சுத்தம் செய்து, பாவமன்னிப்பு கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், நடந்த சம்பவத்தை கண்டு தான் அதிர்ச்சியுற்றதாகவும், அதற்கு தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாக முதலமைச்சர் கூறியதாக தெரிகிறது.