மத்திய உள்துறை அமைச்சக ஊழியா்கள் மீது அதிக ஊழல் புகாா்: சிவிசி தகவல்
மத்திய அமைச்சகங்களியிலேயே உள்துறை அமைச்சகத்தில் தான் அதிக ஊழல் புகாா்கள் பதிவாகியுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி) தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு அடுத்தபடியாக ரயில்வே துறை அமைச்சகத்திலும், வங்கி துறை அமைச்சகத்திலும் அதிக ஊழல் புகாா்கள் பதிவாகியுள்ளன. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சமீபத்தில் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு மத்திய அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மொத்த ஊழல் புகாா்களின் எண்ணிக்கை 1,15,203 ஆகும். அந்த புகார்களில் 85,437 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் 29,766 புகார்கள் நிலுவையில் உள்ளன. 22,034 புகார்கள் 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பதிவு செய்யப்பட்ட புகார்களில், 46,643 புகார்கள் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிளுக்கு எதிராகவும், 10,580 புகார்கள் மத்திய ரயில்வே துறை அமைச்சக அதிகாரிளுக்கு எதிராகவும், 8,129 புகார்கள் வங்கி துறை அமைச்சக அதிகாரிளுக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஊழல் புகார்களில் 23,919 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மேலும், ரயில்வே துறையில் பதிவான 9,663 புகார்களுக்கும், வங்கி துறையில் பதிவான 7,762 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், டெல்லி அரசு அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 7,370 ஊழல் புகாா்களில் 6,804 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.