
திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தின் முதல்வர் அம்மாநிலத்தில் உள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஓர் அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார்.
ஹரியானா கர்னல் மாவட்டத்தில் மக்கள் குறைத்தீர் கூட்டமானது அண்மையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் அம்மாநில முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் அவர்கள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது திருமணம் ஆகாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தனக்கு ஊக்கத்தொகை கொடுக்காதது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் கூறிய முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹரியானாவில் இனி திருமணம் ஆகாத நபர்களுக்கும் விரைவில் ஊக்கத்தொகை வழங்குவதாக ஓர் அறிக்கையினை அறிவித்துள்ளார்.
ஊக்கத்தொகை
திருமணம் ஆகாத நபர்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.2,750 ஊக்கத்தொகை
அம்மாநில முதல்வரின் இந்த அறிவிப்பின் படி, 45 வயதுமுதல் 60 வயது வரையுள்ள திருமணமாகாத நபர்களுக்கு ஹரியானா அரசு விரைவில் ஊக்கத்தொகையினை வழங்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இப்புதிய திட்டத்தின் மூலம், கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து அம்மாநில முதல்வர் இந்த திட்டம் குறித்து மாநில அரசு அடுத்த ஒரு மாத கால அவகாசத்திற்குள் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, திருமணம் ஆகாத நபர்கள் இனி மாதந்தோறும் ரூ.2,750 ஊக்கத்தொகையாக பெறுவார்கள் என்றும் தெரிகிறது.
ஏற்கனவே, அந்த மாநிலத்தில் பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்தில் தாய், தந்தை ஆகியோரில் யாரேனும் ஒருவர் உயிரிழந்தாலும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.