நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு அனைத்துக் கட்சிகளும் பங்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்து ட்வீட் செய்திருக்கும் அமைச்சர் ஜோஷி, "நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், 2023 ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தொடரும். மழைக்கால கூட்டத்தொடரின் போது சட்டமன்ற வணிகம் மற்றும் பிற விஷயங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்களில் பங்களிக்க அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டத்தால் விவாதங்கள் வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
23 நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் இருக்கும் என்று அவர் இன்னொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் இந்த மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வலுவான கருத்தை தெரிவித்திருக்கும் நேரத்தில் நாடாளுமன்றம் கூட இருப்பதால் இந்த கூட்டத்தொடரில் விவாதங்கள் புயலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தொடரின் போது, முக்கிய துறைகள் புதிய நிறுவனத்திற்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.