ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை வழக்கத்தில் இருந்து மூன்று நாட்கள் தாமதமாகி, ஜூன் 4ஆம் தேதி கேரளாவை வந்தடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழைக்காலம் இலையுதிர்கால அறுவடைக்கு இன்றியமையாத ஒன்றாகும். மேலும், இந்த மழைக்காலம் உணவு விலை மற்றும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 2022ஆம் ஆண்டில், கேரளாவின் பருவமழை திட்டமிடப்பட்டதை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக வந்தது. இந்த ஆண்டு, 96% மழையுடன் கூடிய "சாதாரண" பருவமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக IMD கடந்த மாதம் கூறியிருந்தது. 1971 முதல் 2020 வரையிலான சராசரியின் அடிப்படையில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான LPA(நீண்ட கால சராசரி) 87 செ.மீ ஆகும்.
மே 10க்குப் பிறகு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கேரளாவில் மழை இருக்கும்
நாட்டின் விவசாயப் பரப்பில் 51 சதவீதமும், உற்பத்தியில் 40 சதவீதமும், மழையை நம்பியே இருப்பதால் பருவமழை இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நாட்டின் 47% மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியுள்ளனர். வளமான பருவமழை, கிராமப்புறப் பொருளாதாரத்துடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது. தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் முன்னதாக, 2023ஆம் ஆண்டு இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யக்கூடும் என்று கூறி இருந்தது. மே 10 க்குப் பிறகு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு லட்சத்தீவு மற்றும் கடலோர கேரளாவில் 2.5 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவு பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.