Page Loader
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

எழுதியவர் Sindhuja SM
Jul 02, 2024
02:44 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 6 மாவட்டங்களுக்கு ஜூலை 2ஆம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 முதல் 115.5 மிமீ வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 5 ஆம் தேதி வரை கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. மேலும், ஜூலை 3-ம் தேதி இரவு 11.30 மணி வரை கேரளா-தமிழ்நாடு கடற்கரையில் "கள்ளக்கடல்" என்ற நிகழ்வு ஏற்பட இருப்பது குறித்து தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இந்தியா 

ஜூலை 2 ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை 

கள்ளக்கடல் என்பது, திருடனைப் போல திடீரென்று கடல் பொங்கி வருவதைக் குறிக்கிறது. தென்மேற்குக் கடற்கரையில் பருவமழைக்கு முந்தைய மற்றும் சில சமயங்களில் பருவமழைக்குப் பிந்தைய காலங்களில் அலைகளால் ஏற்படும் கடலோர வெள்ளத்தை இது குறிக்கிறது. கேரளா மற்றும் லட்சத்தீவுகளின் கீழ் மட்டங்களில் மேற்கிலிருந்து தென்மேற்கு நோக்கி பலத்த காற்று வீசி வருவதால் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் ஜூலை 2 ஆம் தேதி வரை கேரளா - கர்நாடகா - லட்சத்தீவு கடற்கரையோரம் உள்ள கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.